Friday, September 21, 2012

சமுதாயத்தை சீரழிக்கும் செயல்படாத இந்திய சட்டங்கள்

இந்தியாவில் 1961-ல் உருவாக்கப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டம் சுயநல ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் இன்றுவரை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.  வரதட்சணை பிரச்சனையை சமுதாயத்திலிருந்து அறவே நீக்க யாருக்கும் விருப்பமில்லை.  சமுதாயம் சீரழியவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம்.  அப்படி அழிகின்ற சமுதாயத்தில் முடிந்தவரை கொள்ளையடிக்கலாம் என்பதுதான் உண்மையான குறிக்கோள். 

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் படி வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் குற்றம்.  ஆனால் இதுவரை வரதட்சணை கொடுத்தவர் எவரையும் நீதிமன்றம் தண்டித்ததில்லை.  அதற்கான காரணம் வரதட்சணையை ஒழிக்க யாருக்கும் அக்கறையில்லை.

  2.  மத்திய அரசுப் பணியாளர் யாரும் தனது திருமணத்திலோ அல்லது தனது பிள்ளைகளின் திருமணத்திலோ வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ, கொடுக்கவோ கூடாது என்று நடத்தை விதிமுறை இருக்கிறது.  இதை யாரும் பின்பற்றுவதில்லை.

  3. தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிமுறைப்படி தமிழ் நாடு அரசுப் பணியாளர் தனது அல்லது தனது பிள்ளைகளின் திருமணத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ, கேட்கவோ இல்லை என்று திருமணம் முடிந்த பிறகு மணமகன், மணமகள் இரு தரப்பிலும் உறுதிமொழி பெற்று அந்த படிவத்தை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும். இதை யாரும் பின்பற்றுவதில்லை. அரசாங்கமும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

  4. தமிழ்நாடு வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சமூக நல அலுவலர், மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் (DSP)  ஆகியோர்கள் தங்கள்து பகுதியில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை நடக்காமல் கண்காணிக்கவேண்டும்.  இதை யாராவது இதுவரை செய்திருக்கிறார்களா?

  5.  திருமண பதிவு விண்ணப்பத்தில் மணமகளும், மணமகனும் தங்களது திருமணத்தில் வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெற்றுக்கொள்ளவோ இல்லை என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.  எத்தனை பேர் உண்மையான உறுதி மொழி கொடுக்கிறார்கள்? திருமணம் பதிவு செய்யப்பட்ட பிறகு மணமகள் தான் வரதட்சணை கொடுத்ததாக கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கிறார்!  யாராவது இதைப்பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்களா?

    சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்கள்  குற்றங்களாக கருதப்படுவதில்லை. வரதட்சணை விஷயத்தில் மணமகள், மணமகன் இருவருமே குற்றம் புரிகிறார்கள். ஆனால் வழக்கு பதிவு செய்வது மணமகன் மீது மட்டும்.   அப்படியென்றால் பெண்களை வரதட்சணை கொடுத்து குற்றம் புரிய அரசாங்கம் ஊக்கமளித்து கடைசியில் வரதட்சணை கொடுக்க முடியாத ஏழைப் பெண்களின் வாழ்வை நாசமாக்குகிறது.

இப்படி இந்திய சட்டங்களும், விதிமுறைகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமல் வரதட்சணை பற்றி கூச்சலிடுவது மிகப்பெரிய குற்றம்.  இன்னும் சொல்லப்போனால் செய்தித்தாள்களில் அரசாங்கப் பணியில் இருக்கும் மணமகளின் தந்தை, உயர் கல்வி கற்ற மணமகள் தாங்கள் திருமணத்தில் வரதட்சணை கொடுப்பதாக தைரியமாக தங்களது சட்டவிரோதமான செயலைப் பற்றி பெருமையாக அறிக்கை தருகிறார்கள்.  காவல்துறையோ, நீதிமன்றமோ இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.  

காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் இவர்களைப் பொறுத்தவரை சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாமல் சமுதாயத்தில் குற்றங்களை ஊக்குவித்து அதில் பல குடும்பங்களை சிதைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோள் என்று பின்வரும் செய்தியைப் படித்தால் நன்றாகவே புரியும்.

தாலி கட்டிய 4 மணி நேரத்தில் மனைவியை பிரிந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி

 தினமலர் 21 செப்டம்பர் 2012

சென்னை: போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும், சென்னையை சேர்ந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி, தாலி கட்டிய, நான்கு மணி நேரத்தில் மனைவியை பிரிந்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சென்னை வளசரவாக்கம், காமாட்சி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது மகள் பவித்ரா, 22, பி.எஸ்.சி., பட்டதாரி. இவரது போட்டோ மற்றும் அவர் படிப்பு பற்றிய தகவல்களை திருமண இணையத்தளத்தில் வெளியிட்டு, மாப்பிள்ளை தேடி வந்தனர். எழும்பூர் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரயில்வே அதிகாரி செங்குட்டுவன். இவரது மகன் கோவேந்தன், 25. ஐ.எப்.எஸ்., (இந்தியன் பாரீன் சர்வீஸ்) அதிகாரி. இணையதளத்தில் வெளியான விளம்பரத்தை பார்த்த செங்குட்டுவன், மகன் கோவேந்தனுக்கு, பவித்ராவை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இரு தரப்பினரும் பேசி, திருமணத்தை நிச்சயம் செய்தனர். கடந்த, 18ம் தேதி, கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை திருமணம் நடந்தது. வரதட்சணையாக, பெண் வீட்டார், 50 சவரன் நகையும், மாப்பிள்ளைக்கு, 5 சவரனில் செயின் மற்றும் 7.5 லட்ச ரூபாய் ரொக்கம் கொடுத்தனர். முகூர்த்த நேரமான காலை, 7:00 மணி முதல், 8:00 மணிக்குள், பவித்ராவின் கழுத்தில், கோவேந்தன் தாலி கட்டினார். தாலி கட்டிய பிறகு மதிய உணவு மண்டபத்தில் தயாராக இருந்தது. உணவை சாப்பிடாமல் மாப்பிள்ளை வீட்டார் புறக்கணித்தனர். "மாப்பிள்ளை வீட்டார் ஏன் சாப்பிடவில்லை' என, பெண் வீட்டார் விசாரித்தனர். அப்போது, "4 லட்சம் ரூபாய் ரொக்கம், மாப்பிள்ளை வேலை பார்க்கும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு விமானத்தில் செல்ல, 1.50 லட்சம் ரொக்கம் என, 5.50 லட்சம் ரூபாய் வேண்டும்' என கேட்டனர். "நாங்கள் கேட்ட வரதட்சணையை கொடுத்தால் தான், பெண் வீட்டாருடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வோம்' என, மாப்பிள்ளை வீட்டார் கறாராக கூறினர். இரு வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 8:00 மணிக்கு தாலி கட்டிய கோவேந்தன், 12:00 மணிக்கு, திருமண மண்டபத்தில் இருந்து காரில் வெளியேறினார். மஞ்சள் கயிறு ஈரம் காயும் முன், மனைவியை, கணவர் பிரிந்து சென்றதை, திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் பவித்ரா வந்தார். "தாலி கட்டிய கணவர் என்னை தவிக்க விட்டுச் சென்று விட்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் கொடுத்தார். பத்திரிகையாளர்களிடம், பவித்ராவின் தந்தை பன்னீர்செல்வம் கூறியதாவது: கூடுதல் வரதட்சணை தர மறுத்ததால், மாப்பிள்ளை கொடூரமாக நடந்து கொண்டார். மண்டபத்தில் இருந்து காரின் கதவை வேகமாக சாத்தினார். அப்போது, கதவில் கை வைத்துக் கொண்டிருந்த எனது மகள், கையை வேகமாக எடுத்து விட்டார். இல்லையெனில், மகளின் கை விரல் துண்டாகியிருக்கும். என் மகளின் வாழ்க்கை இப்படி ஆகும் என நினைக்கவே இல்லை. இனிமேல், கோவேந்தனுடன் வெளிநாடு சென்றால், என் மகள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

டாக்டர் மாப்பிள்ளை வரனை கெடுத்தனரா:
பவித்ரா - கோவேந்தனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது, கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஏற்பாடு கைவிடப்பட்டது. அதனால், பவித்ராவுக்கு டாக்டர் மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து, அவரது பெற்றோர், திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அதைத் தெரிந்து கொண்ட கோவேந்தன், அந்த டாக்டர் மாப்பிள்ளையிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, கெடுத்து விட்டதாக தெரிகிறது. அதை நம்பிய டாக்டர் மாப்பிள்ளை, பவித்ரா வேண்டாம், என ஒதுங்கி விட்டார். அச்சம்பவம் நடந்த சில நாட்களில், ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தனின் தந்தை, மீண்டும் பவித்ராவின் தந்தையிடம், "பழைய சம்பவங்களை மறந்து விடுங்கள். என் பையனுக்கு, உங்கள் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது' என, பேசியுள்ளார். அதன் பிறகே, பவித்ராவுக்கும் - கோவேந்தனுக்கும் திருமணம் நடந்துள்ளது.

மாப்பிள்ளை வேணாம்; பவித்ரா பிடிவாதம்:
பவித்ரா கொடுத்த புகார் மனு, ஆயிரம் விளக்கில் உள்ள வரதட்சணை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். "பவித்ரா தான் என் மனைவி; அவருடன் வாழ தயாராக இருக்கிறேன்' என, ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தன், போலீசாரிடம் தெரிவித்தார். பவித்ரா, "ஆரம்பமே பிரச்னையாகி விட்டது. இனிமேல், அவருடன் சந்தோஷமாக வாழ முடியாது. என் புகார்படி நடவடிக்கை எடுங்கள்' என, பிடிவாதமாக இருந்தார். மகளிர் போலீசார், இரு தரப்பினரிடமும் நேற்றிரவு வரை தொடர்ந்து பேசி, இளம் தம்பதியரை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.

1 comment:

Anonymous said...

women are VERY clear !!
===========================
////உதவி போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். "பவித்ரா தான் என் மனைவி; அவருடன் வாழ தயாராக இருக்கிறேன்' என, ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தன், போலீசாரிடம் தெரிவித்தார். பவித்ரா, "ஆரம்பமே பிரச்னையாகி விட்டது. இனிமேல், அவருடன் சந்தோஷமாக வாழ முடியாது. என் புகார்படி நடவடிக்கை எடுங்கள்' என, பிடிவாதமாக இருந்தார். மகளிர் போலீசார், இரு தரப்பினரிடமும் நேற்றிரவு வரை தொடர்ந்து பேசி, இளம் தம்பதியரை சேர்த்து வைக்க முயற்சித்தனர். //////