Tuesday, May 13, 2014

போதிய சட்ட அறிவு இல்லாத கீழ்நிலை நீதிபதிகளிடம் சிக்கித் தவிக்கும் நீதி

இந்தியாவில் பல கீழ்நிலை நீதிமன்றங்களில் போதிய சட்ட அறிவு இல்லாமல் இருப்பவர்கள் பணி புரிகிறார்கள்.  பல வழக்குகளில் இவர்களின் கையில் பல அப்பாவிகள் சிக்கித் தவிக்கிறார்கள்.   குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் கண்ணை மூடிக்கொண்டு குற்றப்பத்திரிக்கையை படிக்காமலேயே வழக்குகளை ஆரம்பித்து பல ஆண்டுகள் இழுத்தடித்து அப்பாவிகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படுகிறது என்பது கீழ்நிலை நீதிமன்றங்களில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு நன்றாகவே தெரியும்.

அதுபோலவே இந்திய மண்ணுக்கு வெளியே இந்திய குடிமகனால் மற்றொரு இந்திய குடிமகனுக்கு இழைக்கப்படும் குற்றங்களை இந்திய நீதிமன்றங்களில் விசாரிக்க மத்திய அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல்தான் கீழ்நிலை நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்பட்டு அப்பாவிகளின் காலம், மனம், பணம் போன்றவை வீணடிக்கப்படுகின்றன.  இதுமட்டுமல்லாமல் இதுபோன்ற தவறான வழக்குகளை நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் நடத்திக்கொண்டிருப்பதால் இந்திய மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது.


அடிப்படை சட்ட அறிவு இல்லாத நீதிமன்றங்களில் சிக்கும் அப்பாவிகளை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

வெளிநாட்டில் குற்றச் சம்பவம்; இந்தியாவில் விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு


மே 13,2014 தினமலர்

மதுரை: 'திருச்சியை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில், தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி, ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக, வந்த புகாரின் அடிப்படையில், கீழ் கோர்ட் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாட்டில் நடந்த குற்றச் சம்பவத்திற்கு, இந்தியாவில் விசாரித்து, தண்டனை வழங்க முடியாது. விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி தேவை,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி புதூர் கார்த்திக் தியோடர். இவர், ஆஸ்திரேலியா சிட்னியில் பணிபுரிந்தார். அங்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், ஓட்டல் வைத்துள்ளார். அவரது 29 வயது மகளுக்கும், கார்த்திக் தியோடருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண், 'எனக்கும், கார்த்திக் தியோடருக்கும், 2007 ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக்கொண்டோம். கணவன், மனைவியாக வாழ்ந்தோம். திருமணம் செய்வதாகக்கூறி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். கார்த்திக் தியோடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கில் கார்த்திக் தியோடருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி செஷன்ஸ் (மகிளா) கோர்ட், 2011 செப்.,29 ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் கிளையில் கார்த்திக் தியோடர் மனு செய்தார்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு:

பெண் குற்றச்சாட்டின்படி, சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அச்சம்பவத்திற்கு இங்கு வழக்குப் பதிவு செய்து, தண்டனை வழங்க முடியாது. இங்கு விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அந்நடைமுறை, இவ்வழக்கில், கீழ் கோர்ட்டில் பின்பற்றப்படவில்லை. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பற்றி, அவரது தரப்பு சாட்சிகளிடமும் விசாரிக்க வேண்டும். புகார்தாரரான தமிழ் பெண் பட்டம் பெற்று, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படித்தபின், அங்கு ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். அவர் தமிழ் பெண்ணாக இருந்துகொண்டு, அவரது பெற்றோருக்குத் தெரியாமல், திருமணத்திற்கு முன்பே, மனுதாரருடன் சேர்ந்து வாழவேண்டிய அவசியம் என்ன? அப்பெண், மனுதாரருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் புகார் கொடுத்திருக்கலாம். திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது. இதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. வெளிநாட்டு வேலைக்குச் சென்றாலும், இந்திய கலாசாரத்தை மறக்காமல் பின்பற்ற வேண்டும். கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்றார்.