Showing posts with label Save Indian Family. Show all posts
Showing posts with label Save Indian Family. Show all posts

Sunday, November 20, 2011

இந்தியக் குடும்பங்களை காக்கக் கிளம்பிய இளைஞர் படை

இந்தியாவில் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி குடும்பங்களை பிரித்து அழிக்கும் பணி செம்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பல அப்பாவிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்கள் இப்படி அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுத்து குடும்பங்களைக் காத்து குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் உருவாகி செயல்பட்டு வருகிறது. அதன் சகோரக் கழகமான அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் உலக ஆண்கள் தினத்தை இந்திய குடும்ப பாதுகாப்பு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தினமாக அனுசரித்து பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருதலைபட்சமாக சட்டங்களை இயற்றி ஆண்களை துன்புறுத்தி குடும்பங்களை சிதைக்கும் அநீதிக்கெதிரான விழிப்புணர்ச்சி பிரசாரத்தை நேற்று சென்னையில் நடத்தினார்கள்.

சென்னை : "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால், குடும்ப அமைப்பு சிதையும் அபாயம் உள்ளது' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க, சென்னை கிளை அமைப்பாளர் பிரான்சிஸ் கூறினார்.

உலக ஆண்கள் தினத்தையொட்டி, நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கணவன் - மனைவி, மாமியார் - மருமகள் ஆகியோருக்கிடையே எழும் சிறிய பிரச்னைகளுக்கும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்கள், தமது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு தொடர்கின்றனர். குடும்ப வன்முறை, விவாகரத்து, குழந்தை காப்புரிமை, ஜீவனாம்சம், கள்ளத்தொடர்பு, தற்கொலை ஆகியவை குறித்த சட்டங்களைக் கொண்டு, பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதை விட, இவற்றை ஆண்களுக்கு எதிராக, தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால், நம் பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றான குடும்ப அமைப்பு முறை சிதையும் அபாயம் உள்ளது. எனவே, ஆண், பெண் பாகுபாடின்றி, இருவரையும் சமமாக கருதும்படி, சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரான்சிஸ் கூறினார்.இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தின், சென்னை கிளை அமைப்பாளர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.