Friday, April 27, 2012

இளைஞர்களை குறிவைத்துக் கொல்லும் இந்திய சட்ட தீவிரவாதம்

“இந்திய சட்ட தீவிரவாதம்” என்று உச்ச நீதிமன்றத்தால் அழைக்கப்படும் பொய் வரதட்சணை வழக்குகள் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வை அழித்து நாசம் செய்து வருவது பல காலமாக நடந்து வருகிறது என்பது உலகறிந்த உண்மை.

பொய் வரதட்சணை வழக்கு என்ற அநீதியால் உயிரையும், மானத்தையும் இழந்தவர்கள் பலர். இந்த அநீதியான பொய் வரதட்சணை வழக்கில் மணிகண்டன் என்ற 33 வயது இளைஞர் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதால் மனவேதனையடைந்து அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் 26 ஏப்ரல் 2011 அன்று மாரடைப்பால் காலமடைந்தார். பின்வரும் வீடியோவைப் பாருங்கள். அவரது இழப்பிற்கு பதில் சொல்லப்போவது யார்?



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மம் வெல்லும் என்று சொல்வார்கள். இந்தியாவில் சட்டத்தின் துணையோடு நடக்கும் இந்த அதர்மத்தில் தர்மம் வெல்லும்போது தர்மத்தை பின்பற்றுபவர்கள் உயிரோடு இருக்க முடியாது. அதுதான் இந்திய சட்ட தீவிரவாதத்தின் விளைவு.

இந்த இந்திய சட்ட தீவிரவாதம் குறிப்பாக உயர்கல்வி கற்ற, உயர் பதவியில் இருக்கும் 28 முதல் 35 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து செயல்படுகிறது. ஏனென்றால் இந்த வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் துடிப்பாக செயல்பட்டு நல்ல பணிகளில் இருந்து அதிக வருமானம் ஈட்டுவதால் அவர்களை பொய் வரதட்சணை வழக்கு மூலம் மிரட்டி பணம் பறிக்கலாம் என்பதால் சட்டத்தின் துணையோடு இந்த சதிவேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த அதர்ம யுத்தத்தில் மானத்தையும், உயிரையும் இழந்த இளைஞர்கள் பலர். அவர்களுக்கு இந்த சமுதயாம் என்ன பதில் சொல்லப் போகிறது?