தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் வெல்லும்!
இந்த வசனத்தை நீங்கள் இதிகாச புராணங்களில் படித்திருப்பீர்கள். இந்த வசனத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை தத்துவத்தை மகாபாரதக் கதையின் அடிப்படையில் விளக்குகிறேன்.
தர்ம வழி சென்ற பஞ்ச பாண்டவர்களை சூது மூலம் துரியோதனக் கூட்டம் தோற்கடித்து காட்டிற்கு அனுப்பினார்கள். சூது மூலம் தருமத்தை வென்றவர்கள் நாட்டில் நலமாக வாழ்ந்தார்கள். ஆனால் தரும வழியில் சென்றவர்கள் காட்டில் வாழ்ந்தார்கள். பிறகு யுத்தத்தின் மூலம் மீண்டும் தருமம் வென்றது. அப்போது சூது மூலம் வென்றவர்கள் அழிந்தார்கள்.
சூதில் வென்றவர்கள் வாழும்போது நன்றாக வாழ்ந்தார்கள். கடைசியில்தான் போரில் மாண்டார்கள். தருமத்தின் வழி சென்றவர்கள் சூதில் தோற்று காட்டில் துன்புற்றார்கள். ஆனால் கடைசியில் போரில் வெல்லும்போது தங்களது குழந்தைகள் அனைவரையும் போரில் இழந்தபிறகுதான் மீண்டும் நாட்டைப் பெறமுடிந்தது. குழந்தைகளை இழந்தபிறகு போரில் வென்றால் என்ன? நாட்டைப் பெற்றால் என்ன? தருமம் வென்றால் என்ன?
இதுதான் இன்றைய பொய் வரதட்சணை வழக்குகளின் நிலை. பொய் வழக்குப்போட்டு உங்களை அதர்மத்தின் மூலம் துன்புறுத்துகிறார்கள். தரும வழியில் செல்லும் நீங்கள் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராடி வாழ்க்கையைத் தொலைத்த பிறகு கடைசியில் நீதி கிடைத்தால் என்ன? தர்மம் வென்றால் என்ன?
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் வெல்லும். ஆனால் தர்மம் மட்டும்தான் வெல்லும் தர்ம வழியில் செல்லும் நீங்கள் இழந்த பொன்னான காலங்களும், வாழ்வும் என்றுமே வெற்றியடைந்ததாகக் கருதமுடியாது.
பல ஆண்டுகளாக இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் பல அப்பாவிகள் இப்படித்தான் அதர்மத்தின் மூலம் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை.
இந்திய அப்பாவிகளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் இந்த அதர்மத்திற்கு எதிரான ஒரு புதிய தர்மயுத்தம். இனிவரும் பதிவுகளில் இந்த அதர்ம யுத்தம் எப்படி அப்பாவிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பதை ஒவ்வொரு நிகழ்வாக படிப்படியாகக் காண்போம்.
இந்திய இதிகாச புராணங்கள், நீதி நூல்கள் போன்றவற்றில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த IPC498A என்ற அதர்மத்தை எப்படி தர்மத்தின் துணையோடு வெல்வது என்பதையும் ஒவ்வொரு பதிவு மூலம் தெரிந்துகொள்வோம்.